
புதுச்சேரி: மாநிலத்தில் பெய்த கனமழையால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சசிகுமார், அசினாபேகம் (38) தம்பதி. நேற்று முன்தினம் (பிப். 21) பெய்த கனமழையால், இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வெள்ளவாரி வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது தனது இருசக்கர வாகனத்தைப் பாதுகாப்பாக வேறு இடத்தில் விடுவதற்காக, அசினாபேகம் சென்றார். இருசக்கர வாகனத்தை அவர் எடுக்க முயன்றபோது, தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது. அத்தோடு அசினாபேகமும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருசக்கர வாகனம் கரை ஒதுங்கியது. ஆனால் அசினாபேகத்தை காணவில்லை. இதனையடுத்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் அசினாபேகத்தைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப். 22) மதியம் கனகன் ஏரி அருகில் உள்ள வாய்க்காலில் அசினாபேகத்தின் உடல் கரை ஒதுங்கியது.
பின்னர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரும்பான்மையை இழந்தது நாராயணசாமி அரசு!