
பெங்களூரில் மூன்றாவதாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 10 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அதிர்ச்சியிலிருந்து தற்போதுவரை மக்கள் மீளாமல் உள்ளனர். அவை அடங்கும் முன்பு சுமார் பத்து நாட்களுக்குள்ளாக, மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 10 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் மஹாதேவபுரம் மண்டலத்திற்குட்பட்ட பெல்லன்டூருக்கு அடுத்த அம்பலிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.ஜெ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பிரிவுகளாக உள்ள இந்த குடியிருப்பில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நடத்திய பரிசோதனையில் சுமார் ஆறு பிரிவுகள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தக் குடியிருப்பில் பிப்ரவரி 15 மற்றும் 22ஆம் தேதி நடத்திய கரோனா பரிசோதனை முடிவில் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிப்ரவரி 13ஆம் தேதி கேவல் பைரசந்திரா நகருக்கு அருகில் உள்ள மஞ்சுஸ்ரீ நர்சிங் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது.
அடுத்ததாக, பிப்ரவரி 15ஆம் தேதி பொம்மனஹல்லி பகுதிக்கு அடுத்த எஸ்.என்.என் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 104 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 96 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.