
ஈரோடு: அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து ரவுடிசம் இல்லை என அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன், கள்ளிப்பட்டியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கள்ளிப்பட்டியில் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் 400-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகன நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகளை அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன், “நாங்கள் மனுக்களை வங்கிப் பெட்டியில் போட்டு பூட்டவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை அரசு அலுவலர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு தற்போது நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறோம்.
ஒரு சிலர் மனுக்களைப் பெற்று பெட்டியில் போட்டு பூட்டிக்கொண்டு செல்கின்றனர். அது என்னவாகும் என்பது உங்களுக்கே தெரியும். நாங்கள் அரசுக்குச் சேவகனாக இருந்து பணியாற்றுகிறோம். வாக்கு சேகரிக்க மட்டுமே நாங்கள் வருவதில்லை. தேர்தல் வந்தால் வருவது தேர்தல் முடிந்தவுடன் காணாமல்போவது அதிமுக நிர்வாகிகளின் வழக்கம் அல்ல” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இப்பகுதியில் அமையவுள்ள வேதபாறை நீர்த்தேக்கம் திட்டத்திற்கு மத்திய அரசின் வன அனுமதிக்காக காத்திருப்பதாகவும் புளியம்பட்டி பவானி ஆற்றுப்பாலத்தை விரிவாக்கம் செய்ய 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் இன்னும் பல்வேறு திட்டங்ளைச் செயல்படுத்த முதலமைச்சர் காத்திருப்பதாகவும், அவர் சொன்னால் செய்வார் சொல்லாததையும் செய்வார் என்றும் தெரிவித்தார்.
அவர் மீண்டும் முதலமைச்சராக வந்தால் திட்டங்கள் அதிகளவு நிறைவேற்ற பணியாற்றுவார் எனவும், அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் எதுவும் இல்லாமல் இருக்கிறதெனவும் ஆட்சி தொடர்ந்து நீடிக்க நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் பேசினார்.
இவ்விழாவில் அரசுத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஒவ்வொருவர் தலையிலும் ரூ.62,500 ரூபாய் கடன்!