
மதுரை: "தமிழ்நாட்டிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான நல வாரியம் அமைப்பது குறித்து, முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்" என்று தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையர் ம.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டை சேர்ந்த ம. வெங்கடேசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "1993ஆம் ஆண்டிற்கு பிறகு தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையாளராக ஒரு தமிழரை மத்திய அரசு நியமித்திருப்பது பெருமைக்குரியது. மனித கழிவுகளை அப்புறப்படுத்த மனிதர்களே மலக்குழிகளுக்குள் இறங்கும் அவல நிலை மாற்றம் செய்யப்படும்.
அதற்காக இயந்திரம் கண்டறிய 50 விழுக்காடு மானியத் தொகையில் வழங்கப்படும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்வது சட்டப்படி குற்றம் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போல் தமிழ்நாட்டிலும், தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியம் அமைப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்" என்றார். மேலும், "மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர் இறப்பு குறித்தான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்" என உறுதியளித்தார்.
இதையும் படிங்க; தனது சாவுக்கு காரணம் இவர்களே! - தற்கொலை செய்துகொண்ட தூய்மைப் பணியாளரின் காணொலி வைரல்!