
தூத்துக்குடி: பட்டியலினத்தவர் மீது தொடர் அடக்குமுறைகள் ஏவப்பட்டால் தமிழ்நாடு அரசை செயலிழக்க வைப்போம் என ஆதித்தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பட்டியல் இன மக்கள் மீது அதிகரித்துவரும் சாதிய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று (பிப். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சமீபகாலமாக பட்டியலினத்தவர்கள் மீது அடக்குமுறைகளும், வன்முறைகளும் அதிகரித்துவருகின்றன. ராமநாதபுரம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் பட்டியலினத்தவர் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
ஆனால் அது குறித்து தமிழ்நாடு அரசு எந்த நீதி விசாரணையும் நடத்தவில்லை. இது தவிர பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மீது வேண்டுமென்றே காவல் துறையினர் மூலமாக தமிழ்நாடு அரசு அடக்குமுறைகளை ஏவுகிறது.
எனவே பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து இம்மாதிரியான செயல்பாடுகளில் தமிழ்நாடு அரசு இறங்குமாயின் அனைத்துப் பட்டியலினத்தவரையும் ஒன்றுதிரட்டி அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து அரசை செயலிழக்க வைப்போம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விஷம் கலந்த வைக்கோலை தின்ற மூன்று மாடுகள் இறப்பு