
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போதே எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து அதிர்ச்சி அளிப்பது அவரின் ஸ்டைல்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ....
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தலைமையில் தேர்தலை சந்திக்கும் அதிமுக, இந்தமுறை முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது.
அதிரடி காட்டிய ஜெயலலிதா
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தவர் ஜெயலலிதா. இரட்டை இலை சின்னத்தை மீட்டு 1991ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த ஜெயலலிதா, ஆட்சியையும் பிடித்தார்.
ஆனால் ஊழல் புகார் காரணமாக 1996ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த ஜெயலலிதா, தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியிலும் தோல்வியை தழுவினார். வளர்ப்பு மகன் திருமணம், சொத்து குவிப்பு வழக்கு என பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும் அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் ஜெயலலிதா. அவரின் அனல் பறக்கும் பரப்புரையால் அதிமுக பல வெற்றிகளை குவித்தது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போதே எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து அதிர்ச்சி அளித்து பரப்புரைக்கு செல்வது அவரின் ஸ்டைல்.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அதிமுக, தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்காது என பல விமர்சனங்கள் எழுந்தபோதும், இன்றுவரை ஆட்சியை தக்கவைத்துள்ளார். ஆனால் தனிப்பெரும் கட்சியான அதிமுக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும், தோல்வியை தழுவியது. அக்கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

கூடுதல் தொகுதி கேட்கும் கட்சிகள்
தற்போது தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு அதிமுகவிற்கு நெருக்கடி அளித்து வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் நட்சத்திர பரப்புரையாளர் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடு செய்வாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.
கூட்டணி பலம் கைகொடுக்குமா?
தன்னை விவசாயிகளின் பிரதிநிதியாக காட்டிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சிகளிள் பலம், அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டம், பாஜக ஆதரவு உள்ளிட்டவை கைக்கொடுக்கும் என நம்பிக்கையுடன் உள்ளார். அவரின் நம்பிக்கை வெற்றி பெறுமா? அல்லது நாடாளுமன்ற தேர்தல் முடிவு தற்போதும் எதிரொலிக்குமா?