
சென்னை: ஊர் காவல் படையினருக்குப் பத்து நாள் மட்டுமே பணி என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஊர் காவல் படை இரவு, பகல் பாராமல் பல்வேறு காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உயர் நீதிமன்றத்தில் ஊர் காவல் படையைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை, 560 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் பணி நாட்களை ஐந்து நாட்கள் என நிர்ணயம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஊர்காவல்படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்து, கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி உள்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலரும், பாஜக மாநில துணை தலைவருமான அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், 10 நாட்கள் மட்டுமே பணி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், மாதம் முழுவதும் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதாகவும், பத்து நாட்களுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அரசாணைப்படி 4 மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு 280 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும், 4 முதல் 8 மணி நேரம் வரை பணியில் இருந்தால் மட்டுமே 560 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையின் பெரும்பாலான பணிகளை செய்யும் ஊர் காவல் படையினருக்கு 10 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்து, மாதம் முழுவதற்குமான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசும், டிஜிபியும் 10 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது ஓட்டு வாங்குவதற்கல்ல! - உயர் நீதிமன்றம் அறிவுரை!