
சென்னை: மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து ஏற்கனவே மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த ஊழியர்களும், அவர்களின் சங்கங்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்திருந்தன.
அவர்களது மனுவில், ஏற்கனவே மின்வாரியத்தில் களப்பணி செய்ய ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை நிரந்தரம் செய்யாமல் தற்போது புதிதாக கேங்மேன் பணியிடத்தை உருவாக்கி தேர்ந்தெடுப்பது ஏற்படையதல்ல எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளில் ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து மின்வாரியம் சார்பில் தாக்கல் செய்த முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அனைத்து விதிகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட 70 விழுக்காடு பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும், புதிதாக கேங்மேன்கள் நியமிக்கப்பட்டாலும் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர் எனவும் எடுத்துரைத்தார். அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 5,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மின்வாரிய தலைவரை மாற்றக்கோரி மின் வாரிய ஊழியர்கள் போராட்டம்