
தமிழ்நாடு என்று சென்னை மாகாணத்துக்கு பெயர் மாற்றம் வந்தது அண்ணாவின் ஆட்சிக்காலத்தில்தான். அப்படி இருந்த பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலம் அவரது அகால மரணத்திற்குப் பின் முடிவுக்கு வந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையைத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவரது திடீர் ஜகாவை அடுத்து, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் களம் காண இருக்கின்றன.
இருப்பினும், வழக்கம்போல் இந்தத் தேர்தலும் திமுக vs அதிமுக என்றே பார்க்கப்படுகிறது. முக்கியமாக கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருவர் இல்லாமல் இரண்டு கட்சிகளும் சந்திக்க இருக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. அதுமட்டுமின்றி, ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆளுமையையும், அனுபவத்தையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அதிமுக மூலம் பாஜக தமிழ்நாட்டில் தனது சித்தாந்தத்தை பரப்ப இருப்பதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருப்பதால் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆரியம் vs திராவிடப் போர் என பரவலாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த காலங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் நடந்தது என்ன?
1952ஆம் ஆண்டு தேர்தல்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய மதராஸ் மாகாணத்திற்கு நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. திராவிடர் கழகத்திலிருந்து திமுக பிரிந்திருந்தாலும் இந்தத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. மாறாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரதான கட்சிகளாக களமிறங்கின. மேலும், த. பிரகாசம் தலைமையில் கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, க்ருஷிகார் லோக் கட்சி, விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, எம்.ஏ. மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி, பி.டி. ராஜன் தலைமையில் நீதிக் கட்சி, பொதுவுடமைக் கட்சி, சென்னை மாநில முஸ்லீம் லீக், ஃபார்வர்ட் பிளாக், தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இருந்தன.
மொத்தம் 367 இடங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 152 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதற்கான அவசர காரியங்களில் அக்கட்சி இறங்கவில்லை. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கிஸான் மஸ்தூர் கட்சி, தமிழ்நாடு தொழிலாளர் கட்சி, காமன்வீல் கட்சி, நீதி கட்சி, கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இருந்த சுயேச்சைகள், த. பிரகாசம் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இணைந்தனர். தங்களுக்கு 166 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென கோரப்பட்டது. ஆனால், ஆளுநர் ஸ்ரீ பிரகாசா அதற்கு மறுத்துவிட்டு ஆட்சியமைக்க காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார்.

பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை சிறந்த முறையில் வழிநடத்தி செல்ல ராஜாஜி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடாததால் அவர் மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜாஜிக்கு ஆதரவாக 200 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மை பெற்று முதலமைச்சராக தொடர்ந்தார். ஆனால் சில காலம் கழித்து காங்கிரஸுக்குள் நடந்த சில பிரச்னைகள் காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜாஜி நீக்கப்பட்டு காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த அமைச்சரவை 1957ஆம் ஆண்டுவரை நீடித்தது.
1957ஆம் ஆண்டு தேர்தல்
கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பரப்புரை செய்த திமுக இந்த முறை களம் கண்டது. ஆம், இந்தத் தேர்தல்தான் திமுக போட்டியிட்ட முதல் தேர்தல். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த இந்தத் தேர்தலில் திமுக உதயசூரியன் சின்னம் கேட்டது. ஆனால், அச்சின்னம் ஒதுக்கப்படாததால் சுயேச்சையாக போட்டியிட்டது திமுக. மேலும், கட்சியின் தலைவர் பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் சேவல் சின்னத்திலும், கருணாநிதி உதயசூரியன் சின்னத்தில் குளித்தலையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

124 தொகுதிகளில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக கோட்டைக்குள் நுழைந்தது திமுக. அந்தத் தேர்தலில் சுமார் 14 விழுக்காடு வாக்குகளை திமுக பெற்றிருந்தது. கட்சி ஆரம்பித்து சில வருடங்களில் திமுக பெற்ற வாக்கு வங்கி அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தலுக்கு பிறகுதான் தேர்தல் ஆணையத்தால் திமுக மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
1962ஆம் ஆண்டு தேர்தல்
மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட தெம்போடு சந்தித்த இந்தத் தேர்தலில் 143 இடங்களில் போட்டியிட்டு 50 இடங்களில் வெற்றி பெற்றது. 206 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தது.

ஆனாலும், 27 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் திமுகவின் வாக்கு வங்கி காங்கிரஸுக்கு கிலியை ஏற்படுத்தியது.எதிர்க்கட்சியாக கோட்டைக்குள் நுழைந்த திமுக காங்கிரஸுக்கு பெரும் குடைச்சலையும் கொடுத்தது.
1967ஆம் ஆண்டு தேர்தல்
57 தேர்தலில் 14 விழுக்காடு வாக்குகள், 62 தேர்தலில் 27 விழுக்காடு வாக்குகள் மட்டுமின்றி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து என வளர்ந்த திமுக இந்தத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியது. அண்ணா முதலமைச்சரான இந்த தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்டு 137 இடங்களை திமுக கைப்பற்றியது. கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றதும் இந்தத் தேர்தலில்தான். மேலும், புதிய வாக்காளர்களின் பலம் என்ன என்பதைக் காட்டி, திமுக வென்ற முதல் தேர்தலும் இதுதான் என்பது கவனிக்கத்தக்கது, ஏனெனில், இத்தேர்தலில் திமுகவின் வாக்குகள் 40.69 விழுக்காடு என்றால், அதில் புதிதாக வாக்களித்தவர்கள் 11.37 விழுக்காட்டினர்.

தமிழ்நாடு என்று சென்னை மாகாணத்துக்கு பெயர் மாற்றம் வந்தது அண்ணாவின் ஆட்சிக்காலத்தில்தான். அப்படி இருந்த பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலம் அவரது அகால மரணத்திற்குப் பின் முடிவுக்கு வந்தது.
1971ஆம் ஆண்டு தேர்தல்
அண்ணாவின் மறைவுக்கு பிறகு கருணாநிதி தலைமையில் திமுக சந்தித்த தேர்தல். 203 இடங்களில் போட்டியிட்டு 184 தொகுதிகளில் வெற்றி பெற்று (48.58 விழுக்காடு) அசுர பலத்தோடு ஆட்சியமைத்தார் கருணாநிதி. ஆனால், அதன் பின் எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் எழுந்த மோதலால் அதிமுக உதயமானது.

1977, 1980, 1984, 1989 வரை எம்ஜிஆர் தலைமையில் ஆட்சி அமைந்தது. இதனையடுத்து நடந்த தேர்தலில் திமுக வென்று ஆளுங்கட்சியாக அமர்ந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகக் கூறி, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் (1991), ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதால் எழுந்த அனுதாபம் காரணமாக, காங்கிரசுடன் கூட்டணியிலிருந்த அதிமுக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார் ஜெயலலிதா.
1996ஆம் ஆண்டு தேர்தல்
இந்தத் தேர்தலில் திமுக மீண்டும் வென்று ஆட்சி அமைத்தது. திமுகவின் இந்த ஆட்சிதான் தமிழ்நாட்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. 2001ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவும், 2011, 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுகவும் ஆட்சியைக் கைப்பற்றின.

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையில், தற்போது இரண்டு கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலை மீண்டும் சந்திக்க இருக்கின்றன. மக்களவைத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்த மக்கள் நீதி மய்யமும், அதேபோல் வாக்கு வங்கியை ஓரளவு உயர்த்தியிருக்கும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் குதித்துள்ளன. எனவே இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்று முன்னர் ஓரளவு கணிக்கப்பட்டது போல் தற்போது கணிக்க முடியவில்லை. திமுக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டாலும், அந்த வெற்றி அவ்வளவு சுலபமாக இருக்காது என்றே தெரிகிறது. எனவே இந்தத் தேர்தல் கடந்த காலத் தேர்தல்களைப் போல், ஒரு போர்தான் என பலர் நினைக்க தொடங்கியுள்ளனர்.