
ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு எள், கடலை சாகுபடிக்காக மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு கடந்த 7ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த வாரம் சத்தியமங்கலம், கோபி வட்டாரத்தில் மழை பெய்ததால் வாய்க்காலில் தண்ணீர் திறப்பை நிறுத்தமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தற்போது வெயில் காலம் நிலவுவதால் கீழ்பவானி வாய்க்காலில் கடலை, எள் சாகுபடிக்கு மீண்டும் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கீழ்பவானி வாய்க்காலில் இன்று (பிப். 23) முதல் 500 கனஅடி நீரும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக 2,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
அதேபோல காலியங்கராயன் வாய்க்காலுக்கும் விநாடிக்கு 300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. பாசனத்துக்கு திறந்துவிடும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96. 57 அடியாகவும், நீர்வரத்து 277 கனஅடியாகவும் உள்ளது. காலிங்கராயன் வாய்க்காலுக்கு 300 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 2, 000 கனஅடி என மொத்தம் 2, 300 கனஅடி நீர் திறந்துவிடுப்படுகிறது. நீர்இருப்பு 26. 12 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிங்க : பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்!