
ஏனாத்தூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலைப் புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகாவுக்குட்பட்ட ஏனாத்தூர் கிராமம் அண்ணாநகர் பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகட்டி பல ஆண்டுகாலமாக குடியிருந்துவருகின்றனர். 40 ஆண்டுகாலமாக குடியிருக்கும் இக்கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டங்களிலும் மனு அளித்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 22) மீண்டும் ஏனாத்தூர் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
வீட்டுமனைப் பட்டா இல்லாத காரணத்தால் தங்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவைகளை பெறமுடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், கடைசி கட்டமாக இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு வழங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தங்கள் கோரிக்கை மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்துவிட்டு வருகின்ற தேர்தலை புறக்கணிக்கவிருப்பதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ’பாஜகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது'