
மதுரை: மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பது தொடர்பான வழக்குகளை அமர்வு நீதிபதிகள் முன்பாக பட்டியலிட பதிவுத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மாடக்குளம் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "மதுரை மாவட்டம், மாடக்குளம் கண்மாய் கபாலீஸ்வரரி மலைப்பகுதி கிராவல் மண் உள்ள பகுதி. இப்பகுதி வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 2021 ஜனவரி 21ஆம் தேதி வயக்காட்டு சாமி என்பவர் தனது ஓட்டுனர் துணையோடு கபாலீஸ்வரரி மலைப் பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக கூறப்படுகிறது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை முற்றுகையிட்டு, வயக்காட்டுசாமி, அவரது ஓட்டுனர் இருவரையும் சிறைபிடித்தனர். பின் அங்கு சென்ற சுப்பிரமணியபுரம் காவல்துறையினர், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதுதொடர்பாக 2021 பிப்ரவரி 1ஆம் தேதி ம் இணையதளத்தில் பார்த்த போது கபாலீஸ்வரி மலைப்பகுதியில் மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் தப்பி சென்று விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே, 2021 ஜனவரி 21ஆம் தேதி காலை 10 மணி முதல் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இதற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விடுவிப்பது தொடர்பான வழக்குகள் அதற்கான சிறப்பு நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குகள் தனி நீதிபதி முன்பாக பட்டியலிடப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
வாகனங்கள் விடுவிக்கப்படுவதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யப்படவில்லை? என வினவிய நீதிபதிகள், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பது தொடர்பான வழக்குகளை அமர்வு நீதிபதிகள் முன்பாக பட்டியலிட பதிவுத் துறைக்கு அறிவுறுத்தி வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு சிலை அமைக்க மறுப்பு தெரிவித்த வழக்கு நாளை ஒத்திவைப்பு