
புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவுத் திட்டமான காவிரி-தெற்குவெள்ளாறு-வைகை-குண்டாறு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று(பிப்ரவரி 21) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்டமாக ரூ.6,941 கோடி மதிப்புள்ள பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து பிரியும் கட்டளைக் கால்வாயில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ., தொலைவுக்கு கால்வாய் வெட்டும் முதல்கட்டப் பணிகளையும் முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பெற்ற விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். மேடையில் காவிரி-தெற்குவெள்ளாறு-வைகை-குண்டாறு திட்டம் மற்றும் ரூ.3,384 கோடி மதிப்பில் காவிரி உபவடிநிலத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்கட்டுமானங்களில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்திற்கான கல்வெட்டையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நீர்ப்பற்றாக்குறை மாநிலம்:
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகையில், "காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படுமா? என பலரும் சந்தேகம் எழுப்பினர். ஆனால், இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாளாக இதைக் கருதுகிறேன். கரூரில் தொடங்கி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு இத்திட்டம் பயன்தரப்போகிறது.
நாட்டு மக்களில் 65 விழுக்காட்டினர் விவசாயிகளாக உள்ளனர். விவசாயத்திற்கு நீர் இன்றியமையாத தேவையாக உள்ளது. தமிழ்நாடு நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலம். எனவே, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத அளவுக்கு நீர் மேலாண்மைத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ரூ.1,417 கோடியில் குடிமராமத்துத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேளாண் மக்களின் நலன் காக்கும் அரசு:
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சிறு குளங்களும் தூர்வாரப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசின் நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுநீரை நேரடியாக காவிரியில் கலப்பதைத் தடுத்து சுத்திகரித்து வெளிவிடும் திட்டம் 'நடந்தாய் வாழி காவிரி திட்டம்”. இத்திட்டம் குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருக்கிறது. வேளாண் மக்களின் நலன் காக்கும் அரசாக, துயர் துடைக்கும் அரசாக எங்கள் அரசு செயல்படுகிறது" என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில், அமைச்சர்களான கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ். மணியன், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகளின் முதலமைச்சரா ஈபிஎஸ்?