
நீலகிரி: பனிப்பொழிவு காரணமாக குன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளில் 500 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை செடிகள் கருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் உள்ளனர். லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சார்பில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும், பெருந்தோட்டம் சார்பில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ளன. இங்கு தேயிலைகள் பறிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது
இந்நிலையில், ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாத வரையில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால் தேயிலை பாதிப்படைவது வழக்கம். குறிப்பாகத் தேயிலை செடிகளில் கருகி வருவதுடன், சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் ஏற்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு 500 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைச் செடிகள் கருகி நாசமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பனியின் தாக்கம் இந்தாண்டு குறைவாக உள்ளதால், பாதிப்பும் குறைவு எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடிக்கடி பணி இடமாற்றம் - வீடியோ பதிவிட்டு வனக்காப்பாளர் தற்கொலை!