
தனியார் மருத்துவமனை தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் கூலித்தொழிலாளி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை: தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கூலித் தொழிலாளி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை சேர்ந்தவர் சம்பத் (42). கூலித்தொழிலாளியான இவர் ஜனவரி 16ஆம் தேதி உடல்நலக்குறைவால் திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோவில் தெருவிலுள்ள ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக் கொண்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறவினர்களிடம் கூறிவிட்டு, இரண்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களாகியும் சம்பத்துக்கு நினைவு திரும்பாததால், உடனடியாக அவசர ஊர்தி மூலம் அத்தியந்தல் பகுதியிலுள்ள ரங்கம்மாள் தனியார் மருத்துவமனைக்கு ஸ்டார் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. அங்கு சிகிச்சை பலனின்றி சம்பத் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சையால்தான் சம்பத் இறந்துள்ளார் எனக் கூறி அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோவில் தெருவிலுள்ள ஸ்டார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டம் நடத்திய உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.