
தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜு ஆகியோரைக் கண்டித்து யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (பிப். 22) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அந்த சமுதாய மக்கள் கூறியதாவது, "அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜு ஆகியோர் சாதி மோதலைத் தூண்டும்வகையில் பேசிவருகின்றனர். அவர்கள் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களது சமுதாயத்தைச் சேர்ந்த பொட்டல் துரை என்பவரை அமைச்சர் ராஜலட்சுமியின் தூண்டுதலின்பேரில் காவல் துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்துள்ளனர்.
இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பொட்டல் துரையை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!